
இவ்வாண்டு வல்லினம் விருது பி. எம். மூர்த்தி அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மலேசியக் கல்விச் சூழலில் நவீன இலக்கியத்தை வலுப்படுத்தியதோடு சிறுவர் இலக்கியம் மலேசிய நாட்டில் வளர பங்காற்றியவர் பி. எம். மூர்த்தி அவர்கள். எஸ்.பி.எம் இலக்கிய வளர்ச்சிக்கும் மலேசிய இளையோர் சிறுகதை எழுச்சிக்கும் பி.எம்.மூர்த்தியின் பங்களிப்பு முதன்மையானது. அவர் வாழ்நாள் சேவையைப் போற்றி இவ்விருது வழங்கப்படுகிறது. விருது தொகையாக RM 5000 ரிங்கிட் வழங்கப்படுவதுடன் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட விருது கேடயமும் வழங்கப்படும்.

இந்த வல்லினம் விருது விழா டிசம்பர் 21 ஆம் திகதி மதியம் 2 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிக்பீல்ட்ஸில் உள்ள YMCA மண்டபத்தில் இந்த விருதுவிழா நடைபெறும். மேலும் இந்த விருது விழாவை ஒட்டி பி.எம்.மூர்த்தி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை விரிவாகப் பகிரும் நூலும் வெளியீடு காண்கிறது.
இவ்விருது விழாவை ஒட்டி தமிழகத்திலிருந்து எழுத்தாளர் பெருமாள் முருகன் சிறப்பு வருகையளிப்பதுடன் இந்நிகழ்ச்சியில் சிறப்புரையும் ஆற்றுகிறார். அதோடு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் நூலை வெளியீடு செய்து வாழ்த்துரை வழங்குகிறார். நூல் தொகுப்பில் பங்களித்தோர் சார்பில் இளம் எழுத்தாளர் சாலினி தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வார். பி.எம்.மூர்த்தியின் ஆளுமை குறித்து மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் மேனாள் தலைமை அமைப்பாளர் எ. சகாதேவன், முனைவர் குமரன், ஆசிரியர் மு. கோபாலன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முன்பதிவு அவசியம். நவம்பர் 30க்குள் பதிவு செய்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலும்.
முன் பதிவுக்கு : முன் பதிவு பாரம்
அனைத்துத் தொடர்புகளுக்கும்: ம. நவீன் 0163194522, அ. பாண்டியன் 0136696944
